உலகின் 3வது பெரிய பணக்காரராக இருந்த கௌதம் அதானி ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் தற்போது 21வது இடத்திற்கு வெறும் 14 நாட்களில் தூக்கி வீசப்பட்டார்.
இந்த நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிட்ட அறிக்கையின் மூலம் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. அதிலும் முக்கியமாக அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் ஒரே நாளில் 30 சதவீதம் வரையில் சரியும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்த நிலையில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழும நிர்வாகம் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
அதானி குழுமம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல வகையில் கடன் வாங்கியுள்ளது. இதில் முக்கியமாக இக்குழும பங்குகளை அடைமானம் வைத்து வாங்கப்பட்டு உள்ள கடனை முன்கூட்டியே அடைந்துள்ளது அதானி குழும நிர்வாகம்.
அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை அடைமானம் வைத்து சுமார் 1114 மில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் கடனாகப் பெற்றுள்ளது. இந்தக் கடனுக்கான பேமெண்ட் தேதி என்னவோ செப்டம்பர் 2024 தான், ஆனால் அதானி குழுமம் இதை முன்கூட்டியே அடைத்துள்ளது.
இந்த 1114 மில்லியன் டாலர் அளவிலான கடன் தொகையை முன்கூட்டியே செலுத்தியதன் மூலம் அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவன பங்குகள் வங்கி மற்றும் நிதி நிறுவன கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறது.
இதன் மூலம் அதானி போர்ட்ஸ் & SEZ-ன் 168.27 மில்லியன் பங்குகள், அதானி கிரீன் எனர்ஜி-ன் 27.56 மில்லியன் பங்குகள், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் 11.77 மில்லியன் பங்குகள் விடுவிக்கப்படுகிறது. இது அனைத்தும் அதானி குழுமத்தின் நிர்வாகத்திடமே வர உள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பின் அறிக்கைக்குப் பின்பு அதானி குழும முதலீட்டாளர்கள் விட்டால் போதும் எனப் பங்குகளை விற்பனை செய்துவிட்டு வெளியேறி வரும் நிலையில், இந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள அதிகப்படியான கடன் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் செப்டம்பர் 2024ல் முடிய வேண்டிய கடனை முன்கூட்டியே செலுத்தியுள்ளது.
இதன் மூலம் சந்தையில் இருக்கும் தடுமாற்றத்தைக் குறைப்பது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்கள் மத்தியில் அதானி குழுமம் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு வாய்ப்பாகப் பார்க்கப்படும்.
இதேவேளையில் கடந்த ஆண்டு ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனங்களைக் கையகப்படுத்தியது. இவ்விரு நிறுவனங்களைக் கைப்பற்ற சர்வதேச வங்கிகளிடம் வாங்கிய சுமார் 4.5 பில்லியன் டாலர் கடனின் முதல் தவணையைச் செலுத்துவதற்குப் போதுமான நிதியைத் திரட்ட வேண்டும்.
தற்போதைய நிலைமையில் ஏற்கனவே திட்டமிட்டு இருந்த, 500 மில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் திட்டத்தை ரத்து செய்துள்ளது அதானி குழுமம். மேலும் இந்தப் பத்திர வெளியீடு வருகிற மார்ச் மாதத்திற்குள் நடக்கத் திட்டமிட்டு இருந்தது.
அதானி குழுமம் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி (SCB), Deutsche Bank மற்றும் Barclays உட்படச் சுமார் 14 சர்வதேச கடன் வழங்குநர்களிடமிருந்து சுமார் 4.5 பில்லியன் டாலர் தொகையைக் கடனாகத் திரட்டியது.
இந்த நிலையில் 4.5 பில்லியன் டாலர் கடனின் முதல் தவணையைத் தனது நிறுவனத்தின் உள் வருவாயில் இருந்து செலுத்துவது உட்படப் பிற நிதி திரட்டும் வாய்ப்புகளை ஆராயத் துவங்கியுள்ளது அதானி குழுமம். இதேபோல் இந்தக் கடனுக்கான தவணையை 2024, 2025, 2026 ஆம் ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கவும் 14 வங்கிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.