மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா அண்மையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
அவரது மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. ஆகியவையும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அ.தி.மு.க. இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை 31-ம் தேதி தொடங்க உள்ளது. நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கி பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெறும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7. இதனையடுத்து மறுநாள் பிப்ரவரி 8-ல் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடத்தப்படும். அனைத்து வேட்புமனுக்களையும் திரும்பப் பெற பிப்ரவரி 10-ம் தேதி கடைசி நாளாகும்.
வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்க உள்ளதால் இது தொடர்பாக கட்டுப்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட வேண்டும். வேட்பு மனுத் தாக்கல் செய்யும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். வரும் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய இயலாது.