தீவிரமடையும் இந்தியா- சீனா எல்லை பிரச்சனை – லடாக் காவல்துறை ஆய்வறிக்கை..!

புதுடெல்லி: இந்தியாவும் சீனாவும் 3,500 கிமீ தூரத்துக்கு எல்லையை பகிர்கின்றன. இந்த எல்லை தொடர்பாக 1962-ம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டது.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை காராணமாக இரு நாடுகளிடையே மோதல் தொடர்ந்து வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சீன தரப்பில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இறந்ததாக தகவல் வெளியானது. 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு இந்திய ராணுவம் லடாக் எல்லைப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியது. அதே சமயம், சீன ராணுவம் இந்த எல்லைப் பகுதியில் தன்னை வலுப்படுத்த ராணுவக் கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கியது.

இந்நிலையில், சீனாவின் இந்த ராணுவக் கட்டமைப்பால், இருநாடுகளிடையில் மோதல் மேலும் தீவிரமடையும் என்று லடாக் காவல் துறை சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 -22 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற காவல்துறை உயர்மட்டக் கூட்டத்தில், லடாக் காவல் துறை, எல்லைப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. உள்ளூர் கள நிலவரத்தையும், இதுவரையிலான இந்தியா – சீனா மோதல் நிகழ்வுகளையும் ஆய்வு செய்து லடாக் காவல் துறை இந்த அறிக்கையை உருவாக்கியது. லடாக் எல்லைப் பகுதியில் சீனா ராணுவக் கட்டமைப்பை அமைத்து வருவதால், இனி இப்பிராந்தியத்தில் இந்தியா – சீன ராணுவத்தினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.