மக்களுக்குத் திட்டங்களை வகுப்பதில் சட்டப் பேரவை போன்றது தான் கிராம சபை கூட்டம் – கோவை கலெக்டர் சமீரன் பேச்சு..!

கோவை: குடியரசு தினத்தையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிணத்துக்கடவு ஒன்றியம், அரசம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் சிறப்பு பார்வையாளராகப் பங்கேற்று பேசியதாவது: கிராம மக்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்துதல், பயனாளிகளை தோ்ந்தெடுத்தல் உள்ளிட்ட முடிவுகளை கிராம சபை கூடிதான் முடிவெடுக்கிறது. நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளைப் போல கிராம சபையும் மிக முக்கிய அமைப்பாகும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித் திட்டம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கூட்டப் பொருள்களின் தீர்மானம் இங்குதான் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து தொழுநோய் உறுதிமொழி, பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம் உறுதிமொழி, தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஆகிய உறுதிமொழிகளை கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் அதிகாரிகள், பொதுமக்கள் எடுத்து கொண்டனர். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளா்ச்சி) அலர்மேல்மங்கை, பொள்ளாச்சி சப்- கலெக்டர் பிரியங்கா, மகளிர் திட்ட இயக்குநர் செல்வம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் (பொறுப்பு) கமலகண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.