இரட்டை இலை கிடைத்தே தீரும்… இது ஓபிஎஸ்க்கு குஜராத் விசிட் தந்த தைரியம்..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதில் அதிமுக ஓபிஎஸ் அணி உறுதியாகவே இருக்கிறது.

ஓபிஎஸ்-ன் திடீர் குஜராத் விசிட்டுக்குப் பின்னர் புது தெம்புடன் இருக்கிறார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பறக்க தொடங்கி இருக்கிறது. திமுக கூட்டணியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக ஆளும் திமுக அமைச்சர்கள் பெரும் எண்ணிக்கையில் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் என்றே தெரிகிறது. இதனால் இத்தொகுதியில் பாஜக போட்டியிடாது என கூறப்படுகிறது. திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதனை மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.

அதிமுகவின் இபிஎஸ் அணியானது தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் மனு பெற்றுக் கொண்டிருக்கிறது. இபிஎஸ் அணியின் சார்பாக கேவி ராமலிங்கம், தென்னரசு என வேட்பாளர் ரேஸில் பல பெயர்கள் அடிபடுகின்றன. இன்னொரு பக்கம், அதிமுக கூட்டணியில் இருக்கும் அத்தனை கட்சிகளிடமும் ஆதரவை கோரி வருகிறது இபிஎஸ் கோஷ்டி.

இந்நிலையில் திடீரென குஜராத் பயணம் மேற்கொண்டார் ஓபிஎஸ். அங்கு தமிழர்கள் நடத்திய பொங்கல் விழாவில் ஓபிஎஸ் பங்கேற்றார். ஆனால் ஓபிஎஸ்-ன் பயணமே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நெருக்கமான வட்டாரங்களுடன் பேசுவதற்காகத்தான் என்கின்றன ஓபிஎஸ்-க்கு நெருக்கமான வட்டாரங்கள். ஓபிஎஸ்ஸை குஜராத்துக்கு அழைக்க டெல்லி மேலிடம் ஒப்புதல் தந்திருந்ததாம். இதனையடுத்தே குஜராத்துக்கு திடீரென சென்றாராம் ஓபிஎஸ்.

அத்துடன் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கும் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாகவும் குஜராத்தில் சில தலைகளுடன் ஓபிஎஸ் விவாதித்தாராம். அவர்களுக்கு ஓபிஎஸ்-க்கு மிகப் பெரும் நம்பிக்கையை தந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சென்னையில் நேற்று தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ். சுமார் 3 மணிநேரம் தீவிரமான ஆலோசனை நடத்திய ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது உறுதி; இரட்டை இலை கிடைத்தே தீரும் என அடித்து சொல்லி இருக்கிறார். குஜராத்தில் கிடைத்த நம்பிக்கைதான், ஓபிஎஸ்ஸை இப்படி பேச வைத்தது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.