தமிழகத்துக்கு தினமும் 7 கோடி கிலோ நிலக்கரி வழங்க மத்திய அரசு முடிவு..!

சென்னை: மின்வாரியத்தின் கோரிக்கையை ஏற்று ஒடிசாவில் இருந்து தினமும் 7 கோடி கிலோ நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வருவதால், தமிழக அனல்மின் நிலையங்களில் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 4,320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் தினசரி மின்சார உற்பத்திக்கு 7.20 கோடி கிலோ நிலக்கரி தேவை. ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சார், ஐபி வேலி ஆகிய சுரங்கங்களில் இருந்து இந்த நிலக்கரி பெறப்படுகிறது.

வரும் நாட்களில் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும்போது, வழக்கத்தைவிட மின்தேவையும் அதிகரிக்கும். இதனால், ஒதுக்கப்பட்ட நிலக்கரியைமுழுவதுமாக அனுப்புமாறு மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கு தமிழக மின்வாரியம் சமீபத்தில் கோரிக்கை விடுத்தது.

அதை ஏற்று, தற்போது தமிழகத்துக்கு தினமும் 7 கோடி கிலோ நிலக்கரி அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாடு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்களில் 8 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.