சென்னை: பாஜக இருக்கும் பக்கம் நான் இருப்பேன் என ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணியினரும் தனித்தனியாக போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தனியாக போட்டியிடுவதால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, சுயேட்சை சின்னம்தான் ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்தை சந்தித்த எடப்பாடி தரப்பு ஆதரவு கோரியது. ஆனால், அதை அவர் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஏ.சி.சண்முகம்; பாஜக இருக்கும் பக்கம் நான் இருப்பேன்; பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். பாஜக பக்கம்தான் இருப்பேன். இடைத்தேர்தல் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி நல்ல முடிவெடுக்கும் என கூறினார்.
பாஜக முடிவே எனது முடிவு என ஜான்பாண்டியன் அறிவித்த நிலையில் ஏ.சி.சண்முகம் கைவிரித்ததால் அதிமுகவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக முன்னணி நிர்வாகிகள் நேரில் ஆதரவு கேட்டும் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிளும் உதாசீனப்படுத்தியது. பாஜக எந்த முடிவும் எடுக்காத நிலையிலும் கூட பாஜகவுக்கே ஆதரவு என சிறிய கட்சிகள் அறிவித்தால் பழனிசாமி அணி அதிர்ச்சி அடைந்துள்ளது.