சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதிகளில் உள்ள இரு பட்டாசு ஆலைகளில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து நேற்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உற்பத்தியை நிறுத்தி பாதுகாப்பு நாளாக கடைபிடித்தனர். ஆலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் 1070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. மாநில அரசு, மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை சார்பில் பட்டாசு ஆலையில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி, வெம்பக்கோட்டை அருகே கனஞ்சாம்பட்டி பகுதிகளில் இரு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதனை தொடர்ந்து தமிழ்நாடு பட்டாசு கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா), தமிழன் பட்டாசுகேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா), தி இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் (டிப்மா) ஆகியவை சார்பில் நேற்று பாதுகாப்பு நாளாக கடைபிடித்து அனைத்து ஆலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டது. உரிமையாளர்கள் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்தினர்.மேலும் சிவகாசி ஆர்.டி.ஓ., விஸ்வநாதன் தலைமையில் வருவாய்த்துறையினர் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0