உலக புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சீறி பாய்ந்த காளைகள்-அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்..!

துரை: பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று(ஜன., 17) புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவங்கியது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் , மகேஷ் , மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் பலர் பங்கேற்றனர்.கலெக்டர் அனீஸ் சேகர் உறுதிமொழி வாசித்தார். முதலில் அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் மாடு, வலசை கருப்புசாமி மாடு, அரியசாமி கோயில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலில் வந்த மூன்று மாடுகளும் பிடிபடாமல் சென்றதால் உரிமையாளர்களுக்கு தங்க காசுகள் வழங்கப்பட்டன.

400 மாடுபிடி வீரர்கள் களத்தில் இருக்கின்றனர். 1100 காளைகள் பங்கேற்கின்றன. துள்ளிக்குதித்து சீறி வந்த காளைகளை காளையர்கள் அடக்கி பரிசு பெற்று வருகின்றனர்.பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ளனர். முதல் சுற்று முடிவில் 62 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளின் உரிமையாளர்களே அதிகம் வெற்றி பெற்றனர். களத்தில் வீரர்கள் வெற்றி குறைவாக இருந்தது. அமைச்சர் மூர்த்தியும் நன்கு விளையாட கூடிய வீரர்களை அனுப்புமாறு விழா கமிட்டியுடன் வேண்டுகோள் விடுத்தார்.இது வரை 7 பேர் காயமுற்றனர்.