வாஷிங்டன்: சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவதாகவும், பல ஆயிரம் பேர் இறந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் கூட சீனா கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக தளர்த்தியுள்ளது. சீனாவின் இந்த அலட்சியப்போக்கால் 2020ல் உலக நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலைமை மீண்டும் வரலாம் எனவும், அதற்கான காரணம் பற்றியும் பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
2019 இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் அங்கிருந்து பல நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. 2020ல் உலகில் சுமார் 150க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர்.
இந்த கொரோனா வைரஸால் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கொத்து கொத்தாக ஏராளமானவர்கள் மரணமடைந்தனர். இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவிலும் பல லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு, பல ஆயிரம் பேர் பலியாகினர்.
கொரோனா வைரஸ் திடீரென பரவிய நிலையில் அதனை கட்டுப்படுத்துவது எப்படி என்பது தெரியாமல் உலக நாடுகள் திணறின. இதையடுத்து ஒட்டுமொத்த உலகமும் ஊரடங்கால் முடங்கியது. மேலும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சரிந்த நிலையில் தான் தற்போது சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சீனாவில் கொரோனா பரவல் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
அதாவது சீனாவில் பிஎப் 7 எனும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இதுவரை இல்லாத வகையில் சீனா மோசமாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த மாதத்தில் ஒரே நாளில் 3.7 கோடி பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் தினமும் சீனாவில் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், சுமார் 5 ஆயிரம் பேர் இறந்து வரலாம் எனவும் சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. ஏற்கனவே மக்கள் போராட்டத்தால் ‘ஜீரோ கோவிட் பாலிசி’ என்ற பெயரில் அமலில் இருந்த கடும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தற்போது அனைத்து வகையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. மேலும் பயணங்களில் பின்பற்றப்பட்ட கட்டுப்பாடுகளும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி அதிக எதிர்ப்பு திறனனை வழங்காத நிலையில் மக்கள் நோயால் பாதிக்கப்பட்டால் இயல்பாகவே அதிக எதிர்ப்பு திறனை பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் அதிபர் ஜி ஜின்பிங் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் சீனாவில் குறையாத கொரோனா பரவல், கட்டுப்பாடுகள் தளர்வு, அங்கு செலுத்தப்படும் தடுப்பூசியின் செயல் திறன் குறைவு உள்ளிட்டவை பிற நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. முந்தைய காலத்தை விட சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுமா? என்ற அச்சம் உலக நாடுகளுக்கு எழுந்துள்ளது. இதனால் சீனாவை அனைத்து உலக நாடுகளும் உற்று கவனிக்கின்றன. இந்நிலையில் தான் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சீனாவின் இந்த அலட்சியப்போக்கால் உலக நாடுகள் 2020ம் ஆண்டை போன்ற கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி ஹாங்காங் போஸ்ட் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ”சீனா தனது நாட்டில் பரவும் கொரோனா பரவலை தடுக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. சீனாவின் செய்தி நிறுவனங்களின் தகவலின்போது அந்நாடு தனது மக்களுக்கு இயல்பாக தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கவும், முடங்கிய பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் முயற்சிக்கிறது. இதனால் கட்டுப்பாடுகளில் கவனம் செலுத்தவில்லை. இதனால் நாட்டில் மக்கள் அனைவரும் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் பயணித்து வருகின்றனர். இது 2020ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவியது போன்ற சூழலை ஏற்படுத்தக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவில் 2019 இறுதியில் பரவ தொடங்கினாலும் இந்தியா உள்பட பல நாடுகளில் 2020ம் ஆண்டில் தான் பரவ தொடங்கியது. தொடக்கம் முதலே சீனாவை காட்டிலும் இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகம் காட்டியது. இதனால் தினமும் மக்கள் கொத்துகொத்தாக பாதிக்கப்பட்டு பலியாகினர். இதனால் மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. பஸ், விமானம் உள்ளிட்ட பல போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் முறையை அமல்படுத்தின. இந்நிலையில் தான் தற்போது சீனாவின் அலட்சியத்தால் 2020ம் ஆண்டை போன்ற நிலை வரலாம் என ஹாங்ஹாங் போஸ்ட் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.