பா.ஜனதாவின் உயரிய அமைப்பான தேசிய செயற்குழு இம்மாதம் கூடுகிறது. டெல்லியில் 16 மற்றும் 17ஆம் தேதி களில் தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது.
பா.ஜனதா தலைவர் ஜே. பி நட்டாவின் மூன்றாண்டு பதவிக்காலம் இம்மாத இறுதியில் முடிவடைகிறது. இந்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்க தேசிய செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
அவருக்கு முன்பு தலைவராக இருந்த அமித்ஷாவுக்கும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சட்டசபை தேர்தல்களை சந்திப்பதற்கான வியூகம் வகுப்பது பற்றியும், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. பா. ஜனதா உட்கட்சித் தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சட்டசபை நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நடத்தும் வகையில் உள்கட்சி தேர்தலை தள்ளி வைக்க முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும் ஜி 20 தலைமை பொறுப்பை இந்தியா வகிப்பதால் நாடு முழுவதும் நடத்தப்பட உள்ள கூட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சிகளில் பா. ஜனதா தொண்டர்களை பங்கேற்க செய்வதற்கான செயல் திட்டம் வகுக்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதாவின் செயல்பாடு பற்றியும் மத்திய அரசின் செயல்பாடு குறித்தும் கூட்டத்தில் பேசப்படுகிறது.