சென்னை: பெண்கள் விவகாரம் தொடர்பாக தேசிய மகளிரணி தலைவியான என்னிடம் காயத்ரி ரகுராம் எந்த புகாரையும் அளிக்கவில்லை என வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.
சிக்கிமில் கட்சிப் பணிகளை செய்து வரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான வானதி சீனிவாசன் தமிழ் ஒன் இந்தியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் எங்கு பெண்களுக்கு எதிரான பிர்சசினை எழுந்தாலும் அங்கு பாஜக குரல் கொடுத்து வருகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது பாஜகதான். எங்கள் கட்சியை தவிர வேறு எந்த கட்சியிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜகவில் பெண்களின் பிரச்சினைகளை களைய ஒரு அமைப்பு உள்ளது.
அந்த சிஸ்டத்தில் முதலில் பிரச்சினை கூற வேண்டும். அதைவிட்டுவிட்டு ட்விட்டர் தளம்தான் நமக்கு நீதியை கொடுக்கும் என நினைத்து கொண்டு அங்கு எல்லா புகார்களையும் அளிப்பது தவறான அணுகுமுறை. தேசிய மகளிரணி தலைவி என்ற முறையில் என்னிடம் காயத்ரி ரகுராம் எந்த புகாரையும் அளிக்கவில்லை.
அவர் கூறிய புகார்களை நான் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் மட்டுமே தெரிந்து கொண்டேன். மாநில தலைவர் அண்ணாமலை தன்னை விசாரணைக்கே அழைக்கவில்லை என காயத்ரி கூறுகிறார். மாநில தலைவரிடம் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தேசிய தலைவர் இருக்கிறாரே அவரை அணுகலாமே. அதைவிட்டுவிட்டு ட்விட்டரில் கட்சி பிரச்சினைகளை பேசுவதால் எந்த நியாயமும் கிடைக்காது என வானதி தெரிவித்துள்ளார்.
பாஜகவில் கடந்த 8 ஆண்டுகளாக இருந்தவர் காயத்ரி ரகுராம். இவர் பெண்களுக்கு எதிராக பாஜகவில் பல பிரச்சினைகள் நடப்பதாக ட்விட்டரில் பதிவுகளை போட்டிருந்தார். இந்த நிலையில் அவரை கட்சி தலைமை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்திருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து சமூகவலைதளங்களில் அண்ணாமலைக்கு எதிராகவும் அவர் பெண்களை குறி வைத்து அவதூறு கிளப்புவதற்காகவே வார் ரூம் வைத்திருப்பதாகவும் ட்விட்டரில் பதிவுகளை போட்டிருந்தார்.
இந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட காயத்ரியிடம் கட்சி தலைமை விளக்கம் கேட்டு விசாரணைக்கு அழைக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இதுநாள் வரை தன்னை விசாரணைக்கு அழைக்கவில்லை என காயத்ரி குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் தன்னை துபாயில் 150 பேர் முன்னிலையில் அவதூறாக பேசியதாகவும் அண்ணாமலை மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அண்ணாமலையின் கீழ் பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூற பாஜகவிலிருந்து விலகவும் செய்துள்ளார்.