தயவு செய்து சற்று ஓய்வு எடுங்கள் பிரதமரே… மோடிக்கு மம்தா பானர்ஜி அன்பு வேண்டுகோள்..!

கோல்கட்டா: தனது தாயார் உடல் தகனம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில், மேற்கு வங்கத்தில் நடந்த வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடியிடம்,” உங்கள் தாயாரும் எங்களது தாயார் தான். தயவு செய்து ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்” என கூறினார்.பல்வேறு அரசு திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி மேற்கு வங்கம் செல்வதாக இருந்தது. ஆனால், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் தாயார் ஹீராபென், அதிகாலை 3:30 மணியளவில் காலமானார். இதனையடுத்து மோடி, மேற்கு வங்க பயணத்தை ரத்து செய்துவிட்டு ஆமதாபாத் சென்றார். அங்கு தாயாரின் இறுதிச்சடங்குகளை முடித்த பிறகு, மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பங்கேற்றார்.

ரயில் சேவையை கொடியசைத்து மோடி துவக்கி வைத்தார்.மம்தா பானர்ஜி பேசுகையில், ” உங்கள் தாயாரின் மறைவுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. உங்களின் தாயார் எங்களுக்கும் தாயார் தான். இந்த நேரத்தில் எனது தாயாரை நினைத்து பார்க்கிறேன். ‘.

தொடர்ந்து பணியாற்ற கடவுள் உங்களுக்கு நல்ல பலத்தை கொடுக்க வேண்டும். தயவு செய்து கொஞ்சம் ஓய்வு எடுங்கள். இவ்வாறு அவர் கூறினார். மம்தாவின் பேச்சு பிரதமர் மோடியின் கடமை உணர்வை பாராட்டுவதாகவே இருந்தது.

மம்தா அதிருப்தி ரயில் சேவை துவக்க விழாவில், பா.ஜ., தொண்டர்கள் ” ஜெய் ஸ்ரீராம்” என கோஷம் போட்டனர். இதனால், அதிருப்தி அடைந்த மம்தா பானர்ஜி மேடையில் ஏற மறுத்து விட்டார். ரயில் நிலையத்தின் நடைமேடையிலேயே நின்றார். மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் சுபாஷ் சர்கார் ஆகியோர், மம்தாவை சமாதானபடுத்தி மேடையில் ஏறும்படி வலியுறுத்தினார். ஆனால், மம்தா மறுத்து மேடையில் ஏற மறுத்துவிட்டார்.இதனை தொடர்ந்து, பா.ஜ., தொண்டர்களை அமைதிப்படுத்தும் முயற்சியில் மத்திய அமைச்சர்கள் ஈடுபட்டனர்.