புதுடெல்லி, : 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களை ஒன்றிய அரசுக்கு இலவசமாக வழங்க தயார் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகிலேயே அதிக அளவு தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள முக்கிய கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை, மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உற்பத்தி செய்கிறது. சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் தொற்று அதிகரிக்கும் நிலையில் , எந்தவொரு நிலைமையையும் சமாளிக்க தயாராகுமாறு மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், ஒன்றிய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்ட் டோஸ்களை இலவசமாக தருவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், ”சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் ஒன்றிய சுகாதார துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், ரூ.410 கோடி மதிப்புள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகளை இலவசமாக தருகிறோம். அவற்றை எவ்வாறு ஒப்படைப்பது என்பது குறித்து அரசு தெரிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்” என தெரிவித்தன. தேசிய தடுப்பூசி திட்டத்துக்கு சீரம் இன்ஸ்டிடியூட் 170 கோடி டோஸ்களை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.