கோவை: “கோவை, நீலகிரி தொகுதிகளில் பாஜகவுக்கு எம்பிக்கள் இல்லை என்றாலும்கூட, இந்த 8 ஆண்டுகளில், பிரதமர் மோடி இந்த இரண்டு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களுக்கும் பல்வேறு திட்டங்களை வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறார். என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: “பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், முழுமையாக கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி வளர்ந்திருக்கிறதா என்று கேட்டால் உண்மையாக இல்லை என்று நான் கூறுவேன்.
மத்திய அரசு பல்வேறு பணிகளை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து மாநில அரசுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். நீலகிரியில் இன்றைக்கும் கூடலூரில் இருந்து ஆத்திர அவசரத்திற்கு ஒரு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால், சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளாகியும் ஒரு மருத்துவமனை இல்லை. இதையறிந்து, பிரதமர் அனுமதி வழங்கிய 11 புதிய அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று நீலகிரிக்கு வழங்கியுள்ளார். கோவைக்கு இஎஸ்ஐ மருத்துவமனையை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்தத் தொகுதிகளில் பாஜகவுக்கு எம்பிக்கள் இல்லை என்றாலும்கூட, இந்த 8 ஆண்டுகளில், பிரதமர் மோடி கோவை, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களுக்கும் வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறார். பிரதமரும், மத்திய அரசும் என்னதான் கொடுத்தாலும், அதை சரியாக கொண்டுவந்து இங்கு மக்களிடம் கொடுப்பதற்கு, ஒரு மக்கள் சேவகன் தேவைப்படுகிறான்” என்று அவர் பேசினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏக்கள், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜகவின் மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.