கிறிஸ்துமஸ் பண்டிகையில் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள்- ரூ.1.23 லட்சம் அபராதம்..!

சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, நடத்தப்பட்ட சோதனையில், அதிக கட்டணம் வசூலித்த 76 ஆம்னி பேருந்துகளிடம் ரூ.1.23 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள், வழக்கத்தைவிட பலமடங்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றன. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் எனஅனைத்து பண்டிகை நாட்களின்போதும் இதுகுறித்து புகார்கள் எழுகின்றன. இதையடுத்து, போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு குழுஅமைக்கப்பட்டு, ஆம்னி பேருந்துகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சோதனையின்போது, அதிககட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வதற்கு ஏராளமானோர் ஆம்னி பேருந்துகளை நாடி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, வரும் 2-ம்தேதி வரை தமிழகம் முழுவதும் துணை போக்குவரத்து ஆணையர்கள் தலைமையிலான குழுவினர், சுங்கச்சாவடிகள், பேருந்து நிலையங்களில் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்யுமாறு போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 800-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக சட்டம் ஏதும் இல்லை என்பதால், அவர்களே கட்டணம் நிர்ணயம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் குறித்து மக்கள் புகார் அளிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்நிலையில், சென்னை வடக்கு சரக பகுதிகளில் டிச.23-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வந்தது. இதில் விதிமீறல்கள், வரி செலுத்தாதது, அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, பேருந்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கடந்த 3 நாட்களில் 595 பேருந்துகளில் சோதனைநடத்தப்பட்டுள்ளது. இதில், அதிககட்டணம் வசூலித்த 76 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.1.23 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்ட 12 பயணிகளுக்கு ரூ.15,700 திருப்பி தரப்பட்டுள்ளது. ஜன.2-ம் தேதி வரை இந்த சோதனை தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.