சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜக தலைமையுடன் மோதல் போக்கை கையாண்டு வரும் சிவி சண்முகத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே உரசல்கள் இருப்பதாக கடந்து சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் விழுப்புரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் அழித்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா?
ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. குறிப்பாக அமித் ஷாவை நேரில் சந்தித்த பிறகு அவருக்கு சாதகமான அம்சங்கள் அரசியலில் நிகழத் தொடங்கி இருக்கிறது.
டெல்லி தலைமையின் ஆதரவு இருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் எப்படியாவது அதிமுகவில் மீண்டும் இணைந்து விட வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார்.
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றி விட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதனால் பாஜக தலைமை கடும் அதிருப்தி அடைந்த நிலையில் அதற்கடுத்து தொடர்ந்து அஸ்திரங்களை தொடுக்க ஆரம்பித்தனர் இபிஎஸ் ஆதரவு முன்னாள் அமைச்சர்கள். செங்கோட்டையன் தொடங்கி ஜெயக்குமார் சிவி சண்முகம் கேபி முனுசாமி என பலரும் வெளிப்படையாகவே பாஜகவை விமர்சித்து வந்தனர். குறிப்பாக மாநிலங்களவை உறுப்பினரான சிவி சண்முகம் கடலூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு அதனை வெளிக்காட்டும் வகையில் இருந்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் அதிமுக தோற்றது என பேசியது அப்போதே பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது வரை பாஜகவை வெளிப்படையாகவே விமர்சிக்கும் தலைவர்களில் ஒருவராக சிவி சண்முகம். இந்நிலையில் இபிஎஸ் சிவி சண்முகம் இடையே திடீர் மோதல் ஏற்பட்டதாக யூகங்கள் கிளம்பியுள்ளது. அதாவது மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனமான எம்ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை ஒட்டி கடந்த சில நாட்களாக எடப்பாடி தலைமையிலான அதிமுகவினர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தி, உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அவர்களுடன் வந்து மரியாதை செலுத்தாமல் அவர்கள் வந்து சென்ற பிறகு தனியாக வந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சி.வி. சண்முகத்திற்கும், எடப்பாடி அணிக்கும் ஏதேனும் பிணக்கு ஏற்பட்டுள்ளதோ என பரபரப்பு தொற்றிக் கொண்டது. பல்வேறு விதமான கருத்துக்களும் பரவ தொடங்கியது. சி.வி. சண்முகம் தனி அணியாக செயல்படுகிறாரோ என்ற கருத்துக்கள் பரவிய நிலையில் அது தொடர்பாக அவரிடமே தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது அது முற்றிலும் தவறானது என அவரே விளக்கமளித்தார்.
இந்த நிலையில் சிவி சண்முகம் இடையே மோதல் இருப்பதாகவும் இதனால் விழுப்புரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் மற்றும் பெயர்களை வெள்ளை பெயிண்ட் அடித்து ஆதரவாளர்கள் மறைத்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. “வாழ்க்கை ஒரு வட்டம் பழனிச்சாமிக்கு மூடுவிழா நடத்திய சிவி சண்முகம்.. பழனிச்சாமி படத்தை பேப்பர் போட்டு ஒட்டியும் பெயரை வெள்ளை பெயிண்டால் அளிக்கப்பட்டது” என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வருகின்றனர்.
இதனால் அதிமுகவில் எடப்பாடி சி.வி சண்முகம் இடையேயான மோதல் வெடித்து கிளம்பி இருப்பதாகவும் அதன் வெளிப்பாடாகவே விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர் எடப்பாடி படத்தை அழித்ததாக அதிமுகவிற்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இடையே சில இணையதளங்களும் இது தொடர்பாக செய்தி வெளியிட்ட நிலையில் விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர் விளக்கம் அளித்து இருக்கின்றனர். அதாவது அதிமுக ஒற்றை தலைமை தொடர்பான விவகாரம் முதன்முதலில் எழுந்த போது சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரையும் புகைப்படங்களையும் வெள்ளை பெயிண்ட் கொண்டு மறைத்தனர். இந்த நிலையில் தற்போது பழைய புகைப்படங்களை போட்டோஷாப் செய்து ஓபிஎஸ் அணியினர் பரப்பி வருவதாகவும் தற்போது பகிரப்படும் புகைப்படம் போலியானது என விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.