தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த பணியாளர்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு போனஸ் தொகை வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இந்த போனஸ் தொகையை வழங்குவதன் மூலமாக தமிழக அரசுக்கு ரூ.221 கோடியே 42 லட்சம் செலவு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.