சென்னை: பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 49வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை அண்ணாசிலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் எ.வ.வேலு, பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று இருந்தார்கள்.
மேலும், அரசுத் துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு பெரியாருக்கு அஞ்சலி செலுத்தினர். பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர்.
தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கங்களில் ஒன்றாக கருதப்படும் திராவிட கழகத்தை தோற்றுவித்தவர் ஆவார். இன்றும் திராவிடர்கள் தலைநிமிர்ந்து சமத்துவத்தோடும், பகுத்தறிவோடும் வாழ்கிறார்கள் என்றால், அதில் தந்தை பெரியாரின் பணி மிகப்பெரியது. மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது மிகையாகாது. இன்று பெரியாரின் நினைவுநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.