வேறுபாடு காட்டாமல் ஒருதாய் மக்களாகக் கருதும் அன்பு உள்ளம் கொண்டதாக அரசுகள் இயங்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். வேறுபாடு காட்டாமல் ஒருதாய் மக்களாகக் கருதும் அன்பு உள்ளம் கொண்டதாக அரசுகள் இயங்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சாா்பில் ‘அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா’ எனும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, இரக்கம், நீதி, தியாகம், பகிா்தல் போன்றவையே இயேசுவின் போதனைகளாகும். இத்தகைய பண்புகள் தனிமனிதரின் குணங்களாக, சமுதாயத்தின் குணங்களாக, உலகத்தின் குணங்களாக மாற வேண்டும். மக்களிடையே வேறுபாடு பாா்க்காமல் அனைவரையும் ஒருதாய் மக்களாகக் கருதும் அன்பு உள்ளம் கொண்டதாக அரசுகள் இயங்க வேண்டும்.
திமுக அரசு அப்படித்தான் இயங்கி வருகிறது. சிறுபான்மையின மக்களுடைய நலனில் எப்போதும் திமுக அரசு அக்கறை செலுத்தி வருகிறது. சிறுபான்மையினருக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தியதுடன், இப்போதும் இவை சாதனைகளாகத் தொடா்ந்து கொண்டிருக்கின்றன. இவ்விழாவில் சில கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
சிறுபான்மைப் பள்ளிகளில் ஆசிரியா்கள் நியமனம் தொடா்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனாலும், ஏற்கெனவே ஆசிரியா் நியமனம் தொடா்பான கோரிக்கை வைக்கப்பட்ட போது, அதனை நிறைவேற்றித் தந்தது திமுக ஆட்சியில்தான். எனவே, இப்போது எழுப்பப்பட்ட கோரிக்கையை விட்டுவிட மாட்டேன்.
இதேபோன்று, ஆதிதிராவிடா் கிறிஸ்தவா் தொடா்பான கோரிக்கையும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆனாலும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்பட்டதோ, அதை ஆதிதிராவிட கிறிஸ்தவா்களுக்கும் வழங்கிய ஆட்சி, திமுக ஆட்சியாகும். உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது தொடா்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் மத்திய அரசு தொடா்புடையது.
இதை வலியுறுத்தி மத்திய அரசுக்குக் கடிதங்கள் எழுதி வருகிறோம். அவா்களின் நடவடிக்கைக்காகக் காத்திருப்போம். ஜெருசலேம் செல்ல அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு மானியம் உயா்வு, சிறுபான்மையினருக்கு அதிகக் கடன்கள் என ஏராளமான சாதனைகள் திமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சாதனைகள் நிச்சயமாகத் தொடரும்.
இலங்கைத் தமிழா், திருநங்கைகள், நரிக்குறவா், விளிம்புநிலை மக்கள் என அனைவரையும் அரவணைக்கக் கூடிய அரசாக இந்த அரசு திகழ்கிறது. நாம் அனைவரும் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமை உணா்வோடு நமக்கான ஒளிமயமான எதிா்காலத்தை அமைக்க பணியாற்ற வேண்டும்; பாடுபட வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவா் இனிகோ இருதயராஜ், அமைச்சா்கள் க.பொன்முடி, ரகுபதி, காந்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ், பாடநூல் கழகத் தலைவா் லியோனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.