கோவையில் வழிப்பறி கொள்ளை அதிகரிப்பு: கேள்விக்குறியாகும் பொதுமக்களின் பாதுகாப்பு – எஸ்.பி.வேலுமணி வேதனை.!

கோவை மாநகர் முழுவதும் அதிகம் நடைபெற்று வருவதும், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதும் கவலை அளிக்கிறது என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவை நல்லறம் அறக்கட்டளையின் 24 மணி நேர இலவச ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர், நேற்று அதிகாலை கழிவறைக்கு செல்லும் போது, சில மர்ம நபர்கள் அவரை மிரட்டி, தாக்கி, அவரிடம் இருந்த இரண்டு செல்போன்கள் மற்றும் பணம் உள்ளிட்டவைகளை பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பேரூர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும், புகாரை ஏற்காமல் காவல்துறையினர் அலைக்கழித்து வருகின்றனர். இது போன்று கொள்ளை சம்பவங்களும், வழிப்பறி சம்பவங்களும் கோவை மாநகர் முழுவதும் அதிகம் நடைபெற்று வருவதும், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதும் கவலை அளிக்கிறது.

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இலவச ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பொதுமக்களுக்கு காலம் தவறாமல் வழங்கி வரும் நல்லறம் அறக்கட்டளையின் ஓட்டுநரை தாக்கி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில், ஓட்டுநரின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொள்ளையர்களை உடனடியாக கைது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் #கோவை மாநகர காவல்துறையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.