மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காடு ஜோதி நகரை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 29). இவர் புஜங்கனூர் பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.
சம்வத்தன்று இவர் ஸ்டூடியோவில் செங்கராஜ், போட்டோகிராபர் சுரேந்தர் ஆகியோருடன் வேலை செய்து கொண்டிருந்தார். அதன் பின்னர் பணி முடிந்து ஸ்டூடியோவை மூடிவிட்டு அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.
அதன்பின்னர் வழக்கம் போல மறுநாள் காலை ஸ்டூடியோவை திறக்க தினேஷ் குமார் வந்தார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடைக்குள் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான காமிரா திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தினேஷ்குமார் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர்.அப்போது மேட்டுப்பாளையம் ஒரு தியேட்டர் அருகே சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் காமிரா பையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தோலம்பாளையம் ஆனைகட்டி செங்குளி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (45) என்பதும், அவர் தினேஷ் குமாரின் கடையின் ஷட்டரை உடைத்து காமிராவை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து காமிராவை பறிமுதல் செய்து தினேஷ் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் போலீசார் முருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.