சினிமாவை மிஞ்சும் சம்பவம்… மாமல்லபுர கடற்கரை 50 லட்சத்திற்கு விற்பனை- ஆசையாக வாங்கி ஏமாந்த அப்பாவி நபர்..!

சென்னை: மாமல்லபுரத்தில் கடல் பகுதியை நிலப்பகுதி என்று காட்டி கூறி, 40 சென்ட்டை ரூ.50 லட்சத்திற்கு விற்பனை செய்த சம்பவம் சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் எல்ஐசியை விற்பது, அரசு பேருந்தை விற்பது போல் நகைச்சுவை காட்சிகள் இடம்பெறும். அதுபோல், கடல் பகுதியையும் சர்வே எண் மாற்றி ஏமாற்றி சிலர் விற்பனை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தேவனேரி கடல் பகுதியில் கடந்த 2008ம் ஆண்டு தேவனேரி மீனவர் பகுதியை சேர்ந்த சிலர் மற்றொரு நிலத்திற்கு போலியாக சர்வே எண் உருவாக்கி ஆவணம் தயார் செய்துள்ளனர்.

தேவனேரியில் தெற்கு பக்கம் 40 சென்ட் கடல் பகுதியை கடந்த 2008ம் ஆண்டு குறைந்த விலைக்கு விற்றுள்ளனர். பின்னர், கடல் பகுதியை வாங்கிய தனியார் ஒருவர், அங்கு தற்போது சட்ட விரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், சிறிய ரூம் கட்டி கம்பிவேலி மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கடல் பகுதி ஆக்கிரமிப்பான 40 சென்ட் இடத்தை மீட்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன் தலைமையில், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ரகு, விஏஓ முனுசாமி, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி முன்னிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ரூ.50 லட்சம் மதிப்பிலான 40 சென்ட் கடல் பகுதியை மீட்டனர். ஆக்கிரமிப்புகள், அகற்றும்போது தனியார் ஆக்கிரமிப்பு நபர்கள் மூலம் பிரச்னைகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் வராத வகையில் மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் முன்னிலையில் தேவனேரி கடற்கரை பகுதியில் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, 20 வருடங்களுக்கு முன்பு தேவனேரி மீனவர் பகுதியை சேர்ந்த சிலர் இந்த கடல் பகுதி, எங்கள் ஊர் நிலப்பகுதி என்று, ஏமாற்றி சட்டவிரோதமாக விற்றுள்ளதாகவும், அதையும் தனிநபர் ஒருவர் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று சினிமாவில் உள்ளது போல், மாளிகை மற்றும் சொகுசு ரிசார்ட் கட்டி கடல் காற்று வாங்கி உல்லாசமாக வாழலாம் என்ற ஆசையில் வாங்கி ஏமாந்ததும் தெரியவந்தது.