உதயநிதி மட்டுமல்ல.. அவரது மகன் இன்பநிதி வந்தாலும் வாழ்கனு தான் சொல்லுவோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சேலம் கோட்டை மைதானத்தில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர் கே.என்.நேரு, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடியதா என கேள்வி எழுப்பினார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது, வாரிசு அரசியல் அல்ல என்று நேரு தெரிவித்தார். அதே சமயம் திமுகவை கட்டிக்காத்து எங்களை உருவாக்கிய தலைவர் குடும்பத்துக்கும் தலைவருக்கும் என்றும் நேர்மையோடு அவர்களோடு இருந்து பாடுபடுவோம் என்று கூறினார்.
அவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் வேறு யாருக்கு விசுவாசமாக இருப்போம் என்று கூறிய கே.என்.நேரு உதயநிதி ஸ்டாலின் இல்லை அவர் மகன் வந்தாலும் நாங்கள் வாழ்க என்று தான் சொல்வோம் என்றார்.
இதே போன்று விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சிகள் உதயநிதி ஸ்டாலினை பார்த்து அஞ்சுவதால்தான், போகும் இடங்களில் எல்லாம் அவரை பற்றியே பேசுவதாக விமர்சித்தார்.
இதனிடையே, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன், அமைச்சரவையில் பங்கேற்க, உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து தகுதிகளும் இருப்பதாக தெரிவித்தார்.