டெல்லி: இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா தனது கடற்படை பாதுகாப்பை மேம்படுத்தி வருகிறது.
அந்த வகையில் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மர்மகோவா போர்க்கப்பல் நாளை இந்திய கடற்படையுடன் இணைக்கப்படுகிறது.
ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஒட்டுமொத்த ஆசியாவிலும் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனாவிற்கு சவால் விடுக்கும் ஒரே நாடாக இந்தியா உள்ளது.
இதனால், இந்தியா மீது கோபம் கொண்டுள்ள சீனா அவ்வப்போது பல வழிகளில் இடைஞ்சல் கொடுத்து வருகிறது.
குறிப்பாக எல்லையில் வாலாட்டுவது இந்திய பெருங்கடலில் உளவுக்கப்பல்களை அனுப்புவது என சீனாவின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சீனாவின் இந்த மிரட்டலை சமாளிக்க இந்தியாவும் அனைத்து வழிகளிலும் தயாராகி வருகிறது. அதன் ஒரு படியாக இந்தியக் கடற்படையையும் நவீன மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், பல்வேறு வசதிகளை கொண்ட முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘மர்ம கோவா’ கப்பலை இந்தியா தயாரித்துள்ளது. இந்தக் கப்பலில் ரேடார், ஏவுகணைகள் என ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. இந்தக் கப்பலை இந்திய கடற்படையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை சேர்க்கிறார். இந்தக் கப்பலில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை கீழே பார்க்கலாம்.
கோவாவில் உள்ள மிகவும் புகழ்வாய்ந்த மர்மகோவா துறைமுக நகரின் பெயர் இந்தக் கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்தக்கப்பலை கடற்படையின் போர்கப்பல் வடிவமைப்புக் கழகம் வடிவமைத்துள்ளது. கப்பலின் நீளம் 163 மீட்டர் ஆகும். அகலம் 17 மீட்டர், இதன் எடை மொத்தம் 7,400 டன் ஆகும். இந்த போர்க்கப்பலில் அதி நவீன ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. பூமியில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கும் எவுகணை மற்றும் வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் என முழு போர்த்தளவாடங்களும் இந்தக் கப்பலில் உள்ளது.
இந்தக் கப்பலில் அணு ஆயுதங்கள், உயிரி ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் போர் சூழல்களில் கூட திறம்பட போரிடுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொலை உணர்வு திறன்கள், ரேடார்கள் இந்தக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது. கப்பலின் அதிகபட்ச வேகம் 30 கடல்மைல் வேகம் ஆகும். கப்பலில் ராக்கெட் லாஞ்சர்கள், டார்பிடோ லாஞ்சர்கள் உள்ளிட்ட்ட உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் இந்தக் கப்பலில் இடம் பிடித்துள்ளது.
பல்வேறு பாதுகாப்பு வசதிகளை கொண்ட அதிநவீன நாசகார போர்க்கப்பல் ஆன மர்ம கோவா நாளை இந்திய கடற்படையில் இணைக்கப்படுகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய கடற்படையில் இணைக்கிறார். இந்தக் போர்க்கப்பல் இந்திய கடற்படையின் இணைக்கப்படுவதன் மூலம் இந்திய பாதுகாப்பு மேலும் வலுவடையும் என்று தெரிகிறது. சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், இந்திய கடற்படையில் இணையும் மர்மகோவா போர்க்கப்பலின் மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் கூடுதல் வலு கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.