கேரளாவின் கோட்டயத்தில் உள்ள ஆர்ப்பூக்கரா மற்றும் தலையாழம் ஆகிய இரு ஊராட்சிகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு கி.மீ சுற்றளவில் உள்ள சுமார் 8,000 வாத்துகள், கோழிகள் மற்றும் பிற நாட்டுப் பறவைகளை அழிப்பதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அவசர கால அடிப்படையில் பறவை காய்ச்சல் பாதிப்பு அபாயமுள்ள வளாகங்களை கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் விலங்குகள் நலத்துறைக்கு மாவட்ட ஆட்சியர் பிகே ஜெயஸ்ரீ அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பறவை காய்ச்சல் பாதிப்பு மையத்தில் இருந்து 10 கி.மீட்டர் எல்லைக்குள் 3 நாட்களுக்கு (டிசம்பர் 13 முதல்) கோழி, வாத்து, காடை மற்றும் பிற கோழி முட்டைகள் மற்றும் இறைச்சிகள் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தடை விதித்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதுபோல 10 கி.மீ., சுற்றளவில், 19 உள்ளாட்சி அமைப்புகளில், கோழி, வாத்து அல்லது பிற நாட்டுப் பறவைகள் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகளுடன் இறந்தால், அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அனைத்து பறவைகளையும் பாதிக்கும் H5N1 தொற்று மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இது புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் கடல் பறவைகள் மூலம் பரவுவதாக சொல்லப்படுகிறது.
கோட்டயம் மாவட்டத்தில் ஆர்ப்பூக்கரையில் உள்ள வாத்து பண்ணையிலும், தலையாழத்தில் உள்ள பிராய்லர் கோழி பண்ணையிலும் பறவைகள் இறந்ததை அடுத்து, மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
கால்நடை பாதுகாப்புத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை, காவல் துறை, வனத்துறை, சுகாதாரத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து பறவை காய்ச்சல் பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.