டெல்லி: தமிழகத்தின் கலாசார, பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் பீட்டா உள்ளிட்டவை தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது பீட்டா உள்ளிட்ட பல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கு. உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசுடன் அதிமுக தரப்பில் விஜயபாஸ்கர், ஓ.பன்னீர்செல்வம், ரவீந்தரநாத் உள்ளிட்டோரும் இணைந்து கொண்டனர்.
உச்சநீதிமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்பினர் முன்வைத்த பல வாதங்களை நீதிபதிகள் நிராகரித்தனர். உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, பீட்டாவின் ஷியாம் திவான் ஆஜரானார். அவர் தமது வாதத்தின் போது, ஜல்லிக்கட்டு என்பது மிக கொடூரமானது; நாங்கள் 5 ஆண்டுகளாக ஆய்வு செய்து சேகரித்த தரவுகளைத்தான் தாக்கல் செய்திருக்கிறோம். எந்த ஒரு காளையும் ஜல்லிக்கட்டில் ஓட விரும்புவது இல்லை. ஜல்லிக்கட்டில் காளைகள் கட்டாயமாக ஓட விடப்படுகின்றன என்றார்.
ஆனால் நீதிபதிகளோ, ஜல்லிக்கட்டு எப்படி கொடூரமான விளையாட்டு என்கிறீர்கள்? ஜல்லிக்கட்டில் ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லையே.. ஸ்பெயின் எருது சண்டையில் ஆயுதங்களுடன் மோதுகின்றனர். ஆனால் ஜல்லிக்கட்டில் கைகளால்தானே காளைகளை மனிதர்கள் அடக்குகின்றனர்.. இது எப்படி கொடூரமாகும்? என எதிர் கேள்வி கேட்டனர்.
மேலும் ஒரு விளையாட்டில் உயிர் பலி ஏற்பட்டுவிட்டாலே தடை செய்துவிடலாம் என்பது ஏற்புடையது அல்ல. அது கொடூரமானதும் அல்ல. ஜல்லிக்கட்டில் காளையை யாரும் கொல்லவும் இல்லை. ஜல்லிக்கட்டில் ரத்த காயம், உயிரிழப்பு என்பது எதிர்பாராமல் நிகழ்கின்றன நிகழ்வு. மலையேறுவது கூட ஆபத்தானதுதான்.. அதற்காக மலையேறுவதை கூட தடை செய்துவிட முடியுமா? என்றும் பீட்டா தரப்பை நோக்கி கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், எழுத்துப்பூர்வமாக வாதங்களை 2 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதனால் இவ்வழக்கின் தீர்ப்பு மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.