தென்காசியில் முதல்வர் ஸ்டாலின்… உற்சாக புன்னகையுடன் கை கொடுத்த குழந்தைகள்..!

தென்காசி: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று பொதிகை ரயிலில் பயணித்து தென்காசி வருகை தந்தார்.

ரயில் நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தென்காசி வருகை தந்தார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் வழக்கமாக காரிலும் தொலை தூர பயணங்களுக்கு விமானம் மூலமே சென்று வருகை தருவது வழக்கம். இந்த முறை தென்காசிக்கு ரயிலில் பயணம் செய்ய முடிவு செய்தார்.

முதல்வர் பயணிப்பதற்காக சகல வசதிகளுடன் கூடிய தனியாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு இருந்தது. அதேபோல், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. பொதிகை ரயில் நின்று செல்லும் ரயில் நிலையங்களான விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. ரயில் மூலம் பயணித்து இன்று காலை தென்காசிக்கு வருகை தந்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்காசி ரயில் நிலையத்தில் அமைச்சர் சாத்தூர் ரமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உள்பட திமுக கட்சி நிர்வாகிகளும் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும் ரயில் நிலையத்தில் திரண்டு இருந்த பெண்களும்,குழந்தைகளும் உற்சாகம் அடைந்தனர். முதல்வருக்கு வணக்கம் வைத்தனர். ரயில் நிலையத்தில் இருந்த குழந்தைகள், முதல்வருக்கு கை கொடுக்க ஆர்வம் காட்டினர். முதல்வர் மு.க ஸ்டாலினும் புன்னகை மாறாமல் வணக்கம் செலுத்தியபடி உற்சாகமாக காணப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து தென்காசி பழைய பேருந்து நிலையம், மேலகரம் பகுதி வழியாக குற்றாலம் சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின், அங்குள்ள ஒரு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். முதல்வர் மு.க ஸ்டாலினை வரவேற்க வழி நெடுக திமுக கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான வரவேற்பை திமுகவினர் அளித்தனர். பின்னர் விழா நடைபெற்ற வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்திற்கு வருகை தந்தார். பின்னர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர ராஜபாளையம் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- இயற்கைக்கும், வீரத்துக்கும், ஆன்மீகத்துக்கும், வேளாண்மைக்கும் புகழ்பெற்ற தென்காசிக்கு வந்ததில் பெருமை அடைகிறேன். இயற்கை எழில் கொஞ்சக்கூடிய மாவட்டம் தென்காசி மாவட்டம். அதிக அளவில் அருவிகள், அணைகள் இருக்கும் மாவட்டம் தென்காசி. குற்றாலத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பில் சாரல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தென்காசி மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். புளியங்குடி – சங்கரன்கோவில் இணைப்பு சாலை மேம்படுத்தப்படும். இனாத்தூர் பெரிய ஏரி சுற்றுலா தலமாக ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும். தென்காசி மாவட்டத்துக்கு புதிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் 11,490 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது” என்றார்.