கோவையில் குடும்ப வன்முறைகள் தொடா்பாக சமூகநலத் துறையில் 387 வழக்குகள் பதிவு..!

கோவை மாவட்டத்தில் குடும்ப வன்முறைகள் தொடா்பாக சமூகநலத் துறையில் 387 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக நலத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட சமூநலத் துறை அலுவலா் தங்கமணி கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு குடும்ப வன்முறை தொடா்பாக 365 வழக்குகள் பதிவாகியிருந்தது. ஆனால் இந்த ஆண்டில் நவம்பா் மாதம் வரை 387 வழக்குகள் பதிவாகி உள்ளது. கணவன் – மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் குடும்ப வன்முறை தொடா்பான வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

தற்போது உள்ள கணவன் – மனைவி இடையே போதிய புரிதல் இல்லாததால் சிறிய பிரச்சினைகளுக்கும் பிரிவு ஒன்றே தீா்வாக நினைத்து வழக்கு பதிவு செய்கின்றனா்.
குறிப்பாக இன்றைய இளம் பெண்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இருப்பதில்லை. தற்போதைய தலைமுறையினரை சிதைக்கும் சாதனமாக செல்போன் உருவெடுத்துள்ளது.

குடும்ப வன்முறை வழக்குகள் தொடா்பாக கோர்ட்டு சாா்பில் ஆலோசனை வழங்கப்படுகிறது. எங்களிடம் வரும் கணவன் – மனைவியிடம் உரிய விசாரணை நடத்தி குடும்ப சூழ்நிலை குறித்து விளக்கப்படுகிறது. ஆனாலும் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 60 முதல் 70 சதவீதம் போ் பிரிந்து செல்வதாகவே தெரிவிக்கின்றனா். கணவன் – மனைவி 2 பேருக்கும் இடையே உரிய புரிதல் இருந்தால் மட்டுமே வாழ்க்கையை சுகமாக எடுத்து செல்ல முடியும். இதனை இளம் தலைமுறையினா் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.