ரவுடி பேபி சூர்யா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..!

குண்டர் சட்டத்தில் கைது செய்ய முகாந்திரம் இருப்பதால், டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை: நெட்டிசன்களால் ரவுடி பேபி சூர்யா என்று அழைக்கப்படும் சுப்புலட்சுமி என்ற பெண், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனலை ஆபாசமாக விமர்சித்து, ரவுடி பேபி சூர்யா வீடியோ பதிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கந்தர்ஷா ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ரவுடி பேபி சூர்யாவையும், சிக்கந்தர்ஷா என்ற சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தன் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து ரவுடி பேபி சூர்யா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், காழ்ப்புணர்ச்சியோடு அளிக்கப்பட்ட புகாரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும், தனது கோரிக்கையை அறிவுரைக் கழகம் உரிய முறையில் பரீசிலிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி. டீக்காரமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், பெண்களுக்கு எதிராக சுப்புலட்சுமி ஆபாசமாக பேசியுள்ளதாகவும், அந்த வீடியோக்களை பார்த்து நீதிபதிகள் முடிவெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

பின்னர் லேப்டாப் மூலம் நீதிபதிகளிடம் டிக்டாக் சூர்யாவின் காட்சிகளை காண்பித்தார். ஒரு சில காட்சிகளை மட்டுமே பார்த்த நீதிபதிகள், டிக்டாக் சூர்யாவின் பேச்சுகளை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். வழக்கில் குண்டர் சட்டத்தில் அடைக்க முகாந்திரம் உள்ளதால், சுப்புலட்சுமி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முடியாது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.