அதிகாலையில் வாக்கிங் போன லட்சுமி யானை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்-மணக்குள விநாயகர் கோவிலில் சோகம்..!

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சுமி யானைக்கு பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. 1995 ஆம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை மணக்குள விநாயகர் கோவிலுக்கு பக்தர் ஒருவரால் வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை விநாயகருக்கு சேவை செய்தும், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கி வந்தது. மேலும் புதுச்சேரி மக்களிடமும் பொதுமக்களிடமும் அன்பாக பழகக்கூடியது.

நான்கு கால்களிலும் கொலுசு அணிந்து ஜல் ஜல் என வலம் வரும் அழகை காணவே சிறுவர்களும், பக்தர்களும் வருவார்கள். யானை லட்சுமி பலருக்கும் செல்லப்பிள்ளையாக வலம் வந்தது.

பாசத்திற்குரிய பழகுவதற்கு இனிமையான நல் உள்ளம் கொண்ட யானை லட்சுமி வழக்கம் போல் இன்று விடியற்காலை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து நடை பயிற்சிக்காக வெளியே சென்றது. கல்வே காலேஜ் அருகே நடந்து சென்ற போது திடீரென யானை லட்சுமி மயங்கி கீழே விழுந்தது. மருத்துவர்களும், யானை பாகனும்பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லை. யானை லட்சுமி பறிதாபமாக உயிரிழந்தது.

தகவல் அறிந்து விரைந்து வந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் யானைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கிரேன் மூலம் கோவிலுக்கு எடுத்துச்சென்றனர். உயிரிழந்த லட்சுமி யானைக்கு பட்டு சேலை போர்த்தியும் மலர்கள் தூவியும் ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக மணக்குள விநாயகர் கோவிலில் செல்லப்பிள்ளையாக வலம் வந்த யானை திடீரென உயிரிழந்தது புதுச்சேரியில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏராளமான பக்தர்கள் கண்ணீர்விட்டு அழுது அஞ்சலி செலுத்தினர். எங்கள் குடும்பத்தில் ஒருவரைப்போல வலம் வந்த யானை மரணமடைந்தது மிகப்பெரிய இழப்பு என்று பக்தர்கள் கூறியுள்ளனர். யானை பாகன் உயிரிழந்த லட்சுமியின் அருகிலேயே அமர்ந்து கண்ணீர் விட்டு கதறியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

உயிரிழந்த யானை மணக்குள விநாயகர் கோவில் வாசலில் பக்தர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். யானை பாகனுக்கும் அவர் ஆறுதல் கூறினார். யானை லட்சுமி ஆசி வழங்கியது மட்டுமல்ல நம்மிடம் விளையாடும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே உயிரிழந்த லட்சுமி யானை அதிகாலையில் வாக்கிங் சென்ற போது மயங்கி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. உடல் நலம் குன்றியிருந்த யானை நடக்க முடியாமல் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த காட்சிகள் பதிவாகி உள்ளன.