சபரிமலையில் குவியும் பக்தர்கள் : 10 நாட்களில் மட்டுமே ரூ.52.55 கோடி வசூல்..!

பரிமலையில் வருமானம் அதிகரித்து வருகிறது. மண்டல கால பூஜை சீசன் துவங்கிய முதல் 10 நாட்களில் ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16ம் தேதி நடை
திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வெகுவிமரிசையாக மண்டல பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சபரிமலைக்கு வழக்கமான நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. நேற்றுமுன்தினம் சபரிமலையில் தரிசனத்திற்காக 87 ஆயிரத்து 491 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதேபோல் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நேற்று ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு மூலம் மொத்தம் 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். கடந்த 2 நாட்களில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வருவதை அடுத்து, சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் காணிக்கை வசூலும் அதிகரித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 5.29லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். கனமழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மாலை வரை மலையேறிச் சென்றனர்.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே.ஆனந்தகோபன் கூறுகையில், சபரிமலை யாத்திரை சீசன் துவங்கிய முதல் 10 நாட்களில் கிடைத்த வருமானம் ரூ.52.55 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் கிடைத்த ரூ.9.92 கோடியாக இருந்தது. இந்த சீசனில் கிடைக்கும் வருமானத்தில் நான்கில் மூன்று பங்கு விழாவை நடத்துவதற்கு செலவிடப்படுகிறது. வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கும் வகையில், பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். சன்னிதானத்திற்கு செல்லும் நான்கு பாதைகளும் திறக்கப்பட்டு என்று அவர் கூறினார்.