சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர அரசுத் துறைகள் மூலம் தொழிற்திறன் பயிற்சியும் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில்பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்டபகுதியினரின் வளர்ச்சியாகவும் இருக்கக் கூடாது. அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான், அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும் என்ற வரையறையுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
அரசின் நலத்திட்டப் பயன்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். குறிப்பாக, விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உறுதியாகக் கிடைக்க வேண்டும் என்று கருதுகிறோம்.
அரசின் கவனம் மிகுதியாகத் தேவைப்படுவோரில் குறிப்பிடத்தக்க பிரிவினர் மாற்றுத் திறனாளிகள். தமிழக அரசு பொறுப்பேற்றவுடன், மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகையை ரூ.1,000-லிருந்து, ரூ.2 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இதனால் 2 லட்சத்து 11 ஆயிரத்து 391 மாற்றுத் திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும், சென்னை மாவட்டத்தில் ரூ.1.51 கோடியில் அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.
சாலையோரங்களில் தள்ளுவண்டிக் கடை நடத்துவதற்கான சான்றிதழ்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்கவும், திருமண நிதியுதவியை முழுமையாக ரொக்கமாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மற்றும் ஆலோசனை வாரியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுடன் ரூ.1,763 கோடியில் தொடங்கப்பட உள்ளது. அடுத்த 6 ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு திறன்மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர அரசுத் துறைகளின் மூலம் தொழிற்திறன் பயிற்சியும் அளிக்கப்படும்.
‘சமூகப் பதிவு அமைப்பு’ மூலம்,மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பராமரிப்பாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான பயன்களை அடையாளம் காணுதல், தேர்வு செய்தல்மற்றும் வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்படும். ஒரு மாற்றுத்திறனாளிகூட மன வருத்தம் அடையக்கூடாது. கருணை உள்ளத்தோடு மாற்றுத் திறனாளிகள் நலம் காக்க பாடுபடுவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், எம்எல்ஏக்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், சு.ரவி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலர் ஆனந்தகுமார், ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.