சென்னை: காங்கிரஸ் கட்சி மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரன் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 15-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக கட்சியின் மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரன் மற்றும் மாநில எஸ்.சி. அணித் தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோர் நவ. 24-ம் தேதி நடைபெறும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் ஆஜராகி, விளக்கம் அளிக்குமாறு குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால், இந்தக் கூட்டத்தில் ரூபி மனோகரன் பங்கேற்கவில்லை. ரஞ்சன்குமார் மட்டும் பங்கேற்று விளக்கம் அளித்தார். இதையடுத்து, ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, ரூபி மனோகரனுக்கு அனுப்பிய கடிதத்தில், ”சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள்குறித்து நேரில் ஆஜராகி விளக்கம்அளிக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு, காலஅவகாசம் கேட்டும், உங்கள் கருத்துகளைத் தெரிவித்தும் நீங்கள் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த கருத்துகள் ஏற்கத்தக்கவை அல்ல என்று இக்குழு முடிவெடுத்துள்ளது.
எனவே, அடுத்து நடைபெற உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில், தக்க ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி, உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறீர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரூபி மனோகரனிடம் கேட்டபோது, ”நான் விளக்கம் அளிக்க அவகாசம் கேட்டு கடிதம்அளித்திருந்தேன். அதை ஏற்காமலும், போதிய வாய்ப்பு அளிக்காமலும், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர். இது தவறானநடவடிக்கை. காங்கிரஸில் இதுபோன்ற கலாச்சாரம் தலை தூக்கியிருப்பது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக டெல்லி தலைமையிடத்தில் முறையிடுவேன்” என்றார்.
ரூபி மனோகரன் நீக்கப்பட்டதற்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. யும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ரூபி மனோகரன்மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுதலைவர் ராமசாமி, ரூபி மனோகரன் எம்எல்ஏவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருப்பதாக எனது கவனத்துக்கு வந்தது. இந்தநடைமுறை முறையாக செய்யப்படவில்லை. இது இயற்கை நீதிக்குஎதிரானது. எனவே ரூபி மனோகரனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தற்காலிக நீக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.