பெங்களூர் : கர்நாடக மாநிலம், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு குறித்த போலீசார் விசாரணையில் தினமும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.குக்கர் வெடிகுண்டை மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் வெடிக்க வைத்து அதை ஹிந்து பயங்கரவாதமாக காட்ட ஷாரிக் முயற்சித்துள்ளார். இதற்காகவே தன்னை ஹிந்துவாக அடையாளப்படுத்தி வந்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் குண்டு வெடித்த நாளில் அவர் காவி சட்டை அணிந்திருந்தார். இடுப்பிலும் காவி துண்டு கட்டி இருந்தார்.இதற்கிடையில், 45 சதவீத தீக்காயத்துடன் கங்கனாடியில் உள்ள பாதர் முல்லர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவரால் பேச முடியவில்லை; ஒரு கண் தெரியவில்லை; மற்றொரு கண்ணை திறக்க முடியவில்லை.கை கருகியதால் எழுதவும் முடியவில்லை.
இதனால் அவரிடம் இருந்து போலீசாரால் வாக்குமூலம் பெற முடியவில்லை. கை, உடலில் தீக்காயம் இருப்பதால் எந்த நேரத்திலும், உடல்நிலை மேலும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.’ஷாரிக், எந்த மாதிரியான பயங்கரவாத செயல்களை செய்து வந்தார். அவரது அடுத்த திட்டம் என்ன; அவருடன் இருப்பவர்கள் யார்; அவருக்கு யாரெல்லாம் அடைக்கலம் கொடுத்தனர்; எந்தெந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது’ என்பது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் ‘எப்படியாவது அவரை காப்பாற்றுங்கள்’ என டாக்டர்களிடம் போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.ஷாரிக்குக்கு எட்டு பேர் அடங்கிய டாக்டர் குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர். தற்போதைய நிலையில் அவர் குணமாக 25 நாட்களுக்கு மேல் ஆகும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் உடல் நலம் தேறி வருகிறார்.