இது என்னங்கடா புது ட்ரிக்கா இருக்கு… டூப்ளிகேட் ராணுவ வீரர்களை உருவாக்கிய டுபாக்கூர் கும்பல் – கொத்தாக தூக்கிய போலீஸ்..!!

க்னோ: இந்திய ராணுவத்தில் 4 மாதங்களாக பணியாற்றிய பின்னர், இளைஞர் ஒருவருக்கு தான் ஒரு ராணுவ வீரனே இல்லை என்கிற உண்மை தெரியவந்திருக்கிறது.

உலகில் எத்தனையோ மோசடிகள் நடந்திருக்கின்றன. வேலை வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் பல மோசடி சம்பவங்கள் நடந்திருப்பதை கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், இந்திய ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டதாகவே ஒரு இளைஞரை நம்ப வைத்து, அவரிடம் பல லட்சம் ரூபாயை பறித்திருப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த இளைஞர் மட்டுமல்லாமல் இன்னும் பலரிடம் அந்த ‘சதுரங்க வேட்டை’ கும்பல் இவ்வாறு நம்ப வைத்து பணம் பறித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மெகா மோசடி சம்பவம் குறித்து இங்கு விரிவாக பார்ப்போம்.

உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (21). பிளஸ் 2 வரை படித்துள்ள இவர், வேலை தேடி வந்துள்ளார். அப்போது அவருக்கு ராகுல் சிங் (25) என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. ராகுல் சிங் இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருப்பதாக தன்னை காட்டிக் கொண்டார். மேலும், ராணுவத்தில் துடிப்புள்ள இளைஞர்களை சேர்க்கும் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனை நம்பிய மனோஜ் குமார், தனக்கும் ராணுவத்தில் பணியாற்ற விருப்பம் உள்ளதாக ராகுலிடம் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த ராகுல் சிங், அது சாதாரணமான விஷயம் கிடையாது என்றும், அதற்கேற்ப உடல் தகுதி இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், மெலிந்த தேகத்துடன் இருக்கும் உங்களை ராணுவத்தில் எடுக்க மாட்டார்களே என்றும் ராகுல் சிங் கூறியுள்ளார். அதே சமயத்தில், தனக்கு ராணுவத்தில் ஆள் தேர்வு செய்யும் அதிகாரிகள் பழக்கம் தான், ரூ.20 லட்சம் கொடுத்தால் உடனே ராணுவத்தில் சேர்ந்துவிடலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய மனோஜ் குமார், உடனே தனது பெற்றோரிடம் பேசி அவர்களுக்கு சொந்தமாக இருந்த நிலத்தை விற்று ரூ.16 லட்சத்தை புரட்டியுள்ளார். இப்போதைக்கு இந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள். மீதிப் பணத்தை பிறகு தந்துவிடுகிறேன் என அப்பாவியாக கூறியுள்ளார் மனோஜ் குமார்.

இதையடுத்து, அந்தப் பணத்தை பெற்றுக்கொண்ட ராகுல் சிங், ஒரு வாரத்திற்கு மனோஜ் குமாருக்கு சில உடற்பயிற்சி வகுப்புகளை எடுத்துள்ளார். பின்னர் ஒரு மாதம் கழிந்த நிலையில், மனோஜ் குமாருக்கு ஃபோன் செய்த ராகுல், “நீங்கள் ராணுவத்தில் செலக்ட் ஆகிவிட்டீர்கள்” எனக் கூறியுள்ளார். அவ்வளவுதான். சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார் மனோஜ் குமார். அதன்பிறகு நடந்தது தான் ‘ஹைலைட்டே’.. சில நாட்கள் கழித்து கடந்த ஜுலை மாதம் ராணுவ சீருடை மற்றும் அடையாள அட்டையை கையில் எடுத்து வந்து மனோஜ் குமாருக்கு கொடுத்துள்ளார் ராகுல். மேலும், ஒரு கைத்துப்பாக்கி ஒன்றையும் அவரிடம் கொடுத்துள்ளார்.

முதல் ஆறு மாதக்காலத்திற்கு எனது பாதுகாப்புக்காக பிளாக் கேட்டாக (Black Cat Force) இந்திய ராணுவம் உன்னை நியமித்திருப்பதாக கூறிய ராகுல், தான் எங்கு சென்றாலும் மனோஜ் குமாரை உடன் அழைத்து சென்றிருக்கிறார். மனோஜ் குமாரும் தன்னை ஒரு ராணுவ வீரனாக நினைத்துக் கொண்டு ராகுல் எங்கெல்லாம் செல்கிறாரோ அவருக்கு பின்னாடியே ஓடியிருக்கிறார். முதல் இரண்டு மாதம் பக்காவாக ரூ.15 ஆயிரம் சம்பளமும் மனோஜ் குமார் வங்கிக்கணக்குக்கு வந்துள்ளது. இதனால் மனோஜ் குமாருக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால், அக்டோபர் மாதத்தில் இருந்து அவருக்கு சம்பளம் வரவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு, அடுத்த மாதம் மொத்தமாக சம்பளம் கொடுப்பார்கள் என ராகுல் கூறியிருக்கிறார். ஆனால் சம்பளம் வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த மனோஜ் குமார், அந்தப் பகுதியில் உள்ள ராணுவத்தினரிடம் கேட்டிருக்கிறார். மேலும், தனது அடையாள அட்டையையும் அவர் காண்பித்திருக்கிறார். இதை பார்த்த அவர்கள், இது போலி அடையாள அட்டை எனக் கூறியுள்ளனர். மேலும், அவருக்கு கொடுக்கப்பட்ட துப்பாக்கியும் பொம்மை என்பது தெரியவந்துள்ளது. அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டது மனோஜ் குமாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் ராகுல் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இன்னும் பலரிடம் இநத் மோசடி கும்பல் தங்கள் வேலையை காட்டியிருப்பது தெரியவந்தது. அதாவது, ராகுல் சிங் உண்மையிலேயே ஓராண்டு காலம் ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்திருக்கிறார். பின்னர் 2019-இல் உடல்நலக்குறைவால் ராணுவத்தில் இருந்து விலகிவிட்டார். ஆனால், இதை பற்றி வெளியே கூறாத ராகுல், தான் ராணுவத்தில் உயரதிகாரியாக உள்ளதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளார். மேலும், 10-க்கும் மேற்பட்டோரை ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இதே பாணியில் அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து ஏமாற்றியுள்ளார். இதையடுத்து, ராகுல் சிங் உள்ளிட்ட 3 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.