கோவை கோவில்பாளையம் அருகே உள்ள விளாங்குறிச்சியில் ஷீலா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தாங்கள் பயன்படுத்தும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல குடியிருப்புவாசிகள் அவர்களின் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு சென்றனர். இன்று காலை 4.30 மணியளவில் குடியிருப்பில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனை பார்த்து குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவஇடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் மோட்டார் சைக்கிள் மீது பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். அதற்குள் 6 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது.
இந்த தகவல் கிடைத்ததும் கோவில்பாளையம் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மோட்டார் சைக்கிள்களை யாராவது தீ வைத்து எரித்தார்களா? பெட்ரோல் அல்லது மின் கசிவு காரணமாக தீ பரவி மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானதா? என விசாரணை நடத்தி வருகிறனர்.
அதிகாலையில் மோட்டார் சைக்கிள்கள் தீ பற்றி எரிந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.