2024 தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அதுவே எனது கடைசி தேர்தல் – சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்..!

ந்திர பிரதேசத்தின் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, 2024-ல் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெறாவிட்டால், அதுவே தன் கடைசி தேர்தலாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

கர்னூலில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய சந்திரபாபு நாயுடு, “நான் சட்டசபைக்கு மீண்டும் செல்லவேண்டுமென்றால், அரசியலில் நான் இருக்கவேண்டுமென்றால், ஆந்திராவுக்கு நீதி கிடைக்கவேண்டுமென்றால், அடுத்த தேர்தலில் எங்கள் வெற்றியை நீங்கள் உறுதி செய்யுங்கள். அப்படிச் செய்யாவிட்டால், அதுவே என் கடைசி தேர்தலாக இருக்கும். நீங்கள் என்னை நம்புகிறீர்களா. நீங்கள் என்னை ஆசீர்வதிப்பீர்களா. என்று மக்கள் முன்னிலையில் கூறினார்.

மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் மீண்டும் கொண்டுவருவேன், எதிர்காலத்தை மற்றவர்களுக்கு ஒப்படைப்பேன். என் போராட்டமானது குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் எதிர்காலத்துக்கானது. இது வெறும் மிகைப்பேச்சு அல்ல. நான் அதை முன்பே செய்தேன், அதை நிரூபிக்க மாடல் இருக்கிறது. யோசியுங்கள். நன்மை தீமைகளை எடைபோடுங்கள். நான் சொல்வது சரியென்றால் எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். சிலர் என் வயதைக் கேலி செய்கிறார்கள். நானும், மோடியும் ஒரே வயதுடையவர்கள். பைடன் கூட 79 வயதில் அமெரிக்க அதிபரானார்” என்று கூறினார்.

மேலும் தன் மனைவியை ஆளுங்கட்சி அவமதித்ததாக கூறும் சந்திரபாபு நாயுடு, மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகுதான் சட்டசபையில் நுழைவேன் என்று முன்பே கூறியதை மீண்டுமொருமுறை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.