இந்தியாவில் முதலீடு செய்பவர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படுகின்றனர்- பிரதமர் மோடி பேச்சு..!

பெங்களூரு: இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள், உலகை கவர்ந்துள்ளன. புதிய தொழில் நிறுவனங்கள் உள்ள மூன்றாவது மிகப் பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.

இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருபவர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படுகின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: பல ஆண்டுகளாக இந்தியாவின் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான குறியீட்டில் பெங்களூரு முதலிடம் வகிக்கிறது. இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள், ஏற்கெனவே உலகை கவர்ந்துள்ளன.

உலகளாவிய தொழில்நுட்பத்தில் இந்திய இளைஞர்கள் திறமையை உறுதி செய்துள்ளனர். நமது திறமையை உலக நலனுக்காக பயன்படுத்தி வருகிறோம். புதுமையான கண்டுபிடிப்புகள் உள்ள நாடுகளின் பட்டியலில் கடந்த 2015ம் ஆண்டு இந்தியா 81வது இடத்தில் இருந்தது. தற்போது 40வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் யுனிகார்ன் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 81,000 புத்தொழில் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உலகின் மூன்றாவது மிகப் பெரிய புத்தொழில் நிறுவனங்கள் உள்ள நாடாக இந்தியா திகழ்கிறது.

இந்தியாவில் முதலீட்டாளர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படுகின்றனர். வறுமை ஒழிப்பு போரில் இந்தியா தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது. ஆதார் மற்றும் மொபைல் செயலி திட்டங்கள் ஏழை மக்களுக்கு உகந்ததாக உள்ளது. இந்த திட்டம், பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு அரசு நிதி செலுத்தப்படுவதை உறுதி செய்கிறது. அரசு மின்னணு சந்தை இணையதளம் வெற்றிகரமாக செயல்படுகிறது. ஊழலுக்கான வழிவகைகளை அது குறைத்துள்ளது. இணையதளம் வாயிலாக ஒப்பந்த புள்ளி கோரும் நடைமுறை வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது.