ராஜீவ் காந்தி கொலை வழக்கு – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்..!

ளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சுமார் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்தனர். இவர்களில் பேரறிவாளனை கடந்த மே மாதம் 18ந்தேதி உச்சநீதிமன்றம் 142வது சட்டப்பிரிவில் தனக்குள்ள பிரத்யேக அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது.

இந்நிலையில் தங்களையும் இதே போன்று விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நளினி மற்றும் ரவிச்சந்திரன் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.காவை, பி.வி.நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வு, ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பு வாதத்தை முழுமையாக கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சீராய்வு மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மேல்முறையீட்டு வழக்கில் மத்திய அரசு தரப்பை எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை. உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்த பின்னரும், மத்திய அரசை ஒரு இடையீட்டு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் உரிய கோரிக்கை மனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நடைமுறை சிக்கல் காரணமாக, மத்திய அரசால் இந்த வழக்கில், ஒரு பிரதியாக பங்கெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் உரிய வாதத்தை நீதிமன்றத்தில் எடுத்து வைக்க முடியவில்லை,

அதேபோல், வழக்கில் ஒரு கட்சியாக சேர்க்கப்படாத காரணத்தால் தான், வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்கள், ஆவணங்களை வாதமாக எடுத்து வைக்க இயலாமல் போனது. இந்த வழக்கிலிருந்து நிவாரணம் பெற இவர்கள் தகுதி இல்லாதவர்கள். மத்திய அரசு தனது வாதத்தை முன்வைக்க இயலாததால் தான் இந்த 6 பேரும் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே உச்சநீதிமன்றம் தனது உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.