சென்னை: வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் (சிஎம்சி) முதலாண்டு மருத்துவ மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ஓடவைத்து, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்த வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பான பத்திரிகை செய்தி அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டு விசாரிக்கிறது. இந்நிலையில், ராகிங் விவகாரம் குறித்து அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று அனுப்பிய சுற்றறிக்கை:
ராகிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீதுஉடனடியாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸார் வேண்டுமென்றே வழக்கு பதிவு செய்வதில் தாமதம் செய்தால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வி நிறுவனங்களில் ராகிங் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும், ராகிங் மற்றும் அது தொடர்பான புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், இணையவழி, காவல் உதவி, இலவச உதவி எண்ணில் இருந்து பெறப்படும புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.