திண்டுக்கல் : நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி மதுரையில் இருந்து சாலை மார்க்கமாகவே காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு வரவுள்ளார் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, காந்தி கிராம பல்கலைக்கழக நிகழ்ச்சிக்காக விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழகத்திற்கு வருவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஹெலிபேட் தளத்தில் சோதனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் பயணம் தவிர்க்கப்பட்டு, சுமார் 60 கி.மீ தொலைவுக்கு சாலை மார்க்கமாகவே வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காகவே, இன்று காலை முதல் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மதுரை – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பாஜக கொடிகள் கட்டப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். பெங்களூரிலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக சின்னாளப்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்குவார், அங்கிருந்து சாலை மார்க்கமாக குண்டு துளைக்காத காரில் விழா நடைபெறும் அரங்குக்குச் செல்வார் என ஏற்கனவே தகவல் வெளியானது. ஹெலிபேடில் ஹெலிகாப்டரை இறக்கி சோதனையும் பல கட்டங்களாக நடத்தப்பட்டது.
இந்நிலையில், விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாகவே காரில் காந்திகிராமம் செல்ல இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்குச் சான்றாக, மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னோட்ட நிகழ்வு இன்று நடக்க இருப்பதால் இன்றும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலை நெடுக பாஜக கட்சிக் கொடிகளும் கட்டப்பட்டு வருகின்றன.
இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், மதுரை மார்க்கத்தில் இருந்து திண்டுக்கல் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் அலங்காநல்லூர், பாலமேடு வழியாகவும், பாத்திமா கல்லூரி – நத்தம் வழியாகவும் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் இருந்து திண்டுக்கல் செல்வதற்கு தே.கல்லுப்பட்டி, சேடப்பட்டி, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு வழியாகவும் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர்களையே பயன்படுத்துவார். ஆனால், இந்த முறை சுமார் 60 கி.மீ தொலைவை காரில் பயணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி செல்லும் வழிநெடுகிலும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜகவினர் மக்களைத் திரட்டி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை வந்தபோது, காரில் இருந்து இறங்கி மக்களை நோக்கி கைகாட்டியது போல, நாளையும் பிரதமர் மோடி, காந்திகிராமம் செல்லும் வழியில் மக்களைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுபாதை, கண்காணிப்பு கோபுரம், விமான நிலைய உள்வளாகம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் நான்கு துணை ஆணையர்களின் மேற்பார்வையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மதுரை விமான நிலையத்தைச் சுற்றி 3 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை விமான நிலையம் பாதுகாப்பு மண்டலமாக உள்ளதால் டிரோன் கேமராக்கள் பறக்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் வானவெடிகள் வெடிக்க வேண்டாம் எனவும், புகைகள் வருமாறு எதையும் எரிக்க வேண்டாம் எனவும் தேவையற்ற நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறும் மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பிரதமர் மோடி வருகைக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்கின்றனர். காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.