தறி தொழிலாளிடம் ரூபாய் 10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டியை சேர்ந்த கோபிநாத் என்பவர் தறி தொழிலாளியாக இருக்கின்றார்.
இவரின் செல்போன் எண்ணிற்கு முகநூலில் வந்த நிறுவனம் ஒன்றின் ஆன்லைன் விளம்பரத்தை பார்த்தார். அதில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனால் இவர் முதலில் ரூபாய் 100 முதலீடு செய்து இருக்கின்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு 250 கிடைத்தது.
இதன்பின் அவர் சிறிது சிறிதாக பணத்தை முதலீடு செய்ய அவருக்கு பணம் இரட்டிப்பாக கிடைத்தது. இதனால் கோபிநாத் பல்வேறு வங்கிகளில் ரூபாய் 10 லட்சத்து 23 ஆயிரம் முதலீடு செய்து இருக்கின்றார், ஆனால் அதன் பிறகு அவருக்கு பணம் வர வில்லை. இதைத் தொடர்ந்து அவர் ஆன்லைனில் குறிப்பிட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதன்பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோபிநாத் சேலம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.