திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு கோப்புகளை மலையாள மொழியில் தயாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
மொழி வாரி மாநிலங்களாக கேரளா, கர்நாடகா பிரிந்த நவம்பர் ஒன்றாம் தேதியை அந்த மாநில மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
கர்நாடகாவில் கன்னட ராஜ்யோத்சவா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அதேபோல் கேரளாவிலும் தனி மாநில அங்கீகார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மலையாள தினம் மற்றும் அதிகாரப்பூர்வ மொழி வாரம் கொண்டாட்டம் நேற்று துவங்கியது. இதில் முதல் அமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்றார். அப்போது அவர் மாநிலத்தில் மலையாள மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தவறு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதுபற்றி பினராயி விஜயன் கூறியதாவது:
அரசு கோப்புகளில் மலையாள மொழியே இருக்க வேண்டும். அரசு கோப்புகளில் மலையாள மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் பல அலுவலகங்களில் அரசு கோப்புகள் ஆங்கிலத்தில் தயார் செய்யப்படுகின்றது. இது ஜனநாயக உரிமையை மீறுவதாகும்.
மாநிலத்தில் அனைத்து துறைகளிலும் முழுவதுமாக மலையாளத்தை அலுவல் மொழியாக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் பிற மாநிலங்களில் இருந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்களில் விருப்பம் உள்ள அனைவருக்கும் மலையாள மொழியை கற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.
இந்தியாவில் தற்பாது மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தான் கேரளாவில் அரசு கோப்புகளில் மலையாள மொழியில் இருக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக திமுக உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா மிகவும் உறுதியாக உள்ளார்.
சமீபத்தில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அதன்பிறகு சில நாட்களுக்கு முன்பு அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தி இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.