கோவை: கோயில் அருகே நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கோவை மக்களை கோட்டை ஈஸ்வரன் காப்பாற்றியுள்ளார் என காமாட்சிபுரி ஆதீனம் தெரிவித்தார்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் குறித்து, காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியதாவது: கொங்கு நாட்டில் உள்ள சிவாலயங்களில் மிகவும் பழமையானது கோட்டை ஈஸ்வரன் கோயில். இத்தகைய சிறப்பு கொண்ட கோயில் அருகே அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது. பெரும் அசம்பாவிதத்தில் இருந்து கோவை மக்களை கோட்டை ஈஸ்வரன் காப்பாற்றியுள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாதுகாப்பு பணி மேற்கொண்ட டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட தமிழக காவல்துறையினர் நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது. கோவை மாநகரகாவல் ஆணையராக கடந்த 2011-ல் சைலேந்திரபாபு பணியாற்றிய போது 17 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் தேர் திரு விழாவை சிறப்பான முறையில் உரிய பாதுகாப்பு வழங்கி நடத்திக் காட்டினார்.
மதநல்லிணக்கத்தை பேணிக்காப்பதில் சைலேந்திரபாபு முன்னோடியாக விளங்கி வருகிறார். கோயிலின் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. திருப்பணிகளை அவர் முன்னின்று நடத்தி வைக்க வேண்டும்.