விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க நிதி – மத்திய அமைச்சரவை ஒப்புதல் ..!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. சர்வதேச சந்தையில் கடந்த சில மாதங்களாக உரத்தின் விலை உயர்ந்து வருகிறது. உலகின் முன்னணி உர விற்பனை நாடாக ரஷ்யா திகழ்கிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்திய உரம் இறக்குமதி செய்துவரும் நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உரத்தின் விலை சந்தையில் ஏற்றம் கண்டுள்ளது.

இந்த விலை உயர்வு சுமை விவசாயிகளை பாதிக்காமல் இருக்க மானியம் வழங்கக் கோரி மத்திய வேளாண்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.அதன்படி, 2022-23 ரபி பருவத்தில் அதாவது, அக்டோபர் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு நைட்ரஜன்,பாஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் சல்ஃபர் போன்ற ஊட்டச்சத்துகளைக் கிலோ கிராமுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என்ற உரத்துறையின் பரிந்துரைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, நைட்ரஜனுக்கு ரூ.98.02, பாஸ்பரசுக்கு ரூ.66.93, பொட்டாஷூக்கு ரூ.23.65, சல்ஃபருக்கு ரூ.6.12 தலா ஒரு கிலோவுக்கு மானியமாக வழங்கப்படும்.இதற்காக மொத்தம் ரூ.51,875 கோடி அளவிற்கு மானியம் அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதேபோல், நாட்டில் பெட்ரோல், டீசல் எரிவாயுக்களில் எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. எனவே, கரும்பு விவசாயிகளின் நலன் கருதி எத்தனாலுக்கான அடிப்படை ஆதார விலையும் மத்திய அமைச்சரவை உயர்த்தியுள்ளது. டிசம்பர் 1, 2022 முதல், 31 அக்டோபர் 2023 வரை சர்க்கரை பருவத்தில் எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், பல்வேறு கரும்புகளை அடிப்படையாகக் கொண்ட மூலப் பொருட்களிலிருந்து பெறப்படும் அதிகபட்ச விலை இவ்வாறாக உயர்த்தப்படுகிறது. அதன்படி, ‘சி’ வகையிலான எத்தனால், லிட்டர் ரூ.46.66இல் இருந்து ரூ.49.41 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

‘பி’ வகையிலான எத்தனால் லிட்டர் ரூ.59.08இல் இருந்து ரூ.60.73-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கரும்புச் சாறு, சர்க்கரைப்பாகு மூலம் தயாரிக்கப்படும் எத்தனால், லிட்டர் ரூ.63.45இல் இருந்து ரூ.65.61ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அருணாச்சலப் பிரதேச தலைநகர் இட்டா நகர், ஹாலோங்கியில் உள்ள பசுமை விமான நிலையத்தின் பெயரை “டோன்யி போலோ விமான நிலையம், இட்டா நகர்” என்று பெயர் மாற்றம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலத்தின் நாகரீகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் மக்கள் வணங்கும் சூரியன் (டோன்யி) நிலவு (போலோ) ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.