நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர் , “நெல் கொள்முதலில் சிப்பத்துக்கு ரூ.30 கொடுத்துக் காவிரி நெல்லைச் செல்லுபடியாக்க வேண்டும். ரூ.30 என்பது இடம், காலம் பொறுத்துக் கூடுமே தவிர குறையாது” என்று செய்திதாளில் எழுதியிருந்ததை முதலமைச்சர் படித்து என்னை செல்போனில் உடனே அழைத்து இதுபோன்று தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தவறு எங்கு நடந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நெல் கொள்முதலில் எவ்விதத் தவறும் நடைபெறக்கூடாது என்பதற்காக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். நெல் கொள்முதல் நிலைய சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு கொடுக்கப்பட்டு வந்த ரூ.3.25 என்ற ஊதியத்தை, ரூ.10 உயர்த்தியதோடு பருவகால பட்டியல் எழுத்தர்களுக்குத் தினப்படியாக ரூ.120 மற்றும் பருவகால உதவுபவர்களுக்கும் காவலர்களுக்கும் தினப்படியாக ரூ.100 கூடுதலாக வழங்க ஆணையிட்டார். நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது. என்னை அழைத்து ஊதியத்தைக் கணிசமாக உயர்த்திக் கொடுத்துள்ளதால் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி இனி நெல் கொள்முதல் நிலையங்களில் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். நெல் கொள்முதல் தொடர்பாக புகார் ஏதுமிருந்தால் கட்டணமில்லாத் தொலைபேசி (18005993540) எண்ணிற்குத் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.