கடந்த அக்டோபர் மாதம் மட்டும் ஜிஎஸ்டி வரியாக ரூ.1.51 லட்சம் கோடி வசூல்..!

டெல்லி: கடந்த அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரியாக ரூ.1.51 லட்சம் கோடி வசூலானதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் 16.6 சதவீதம் அதிகம் என ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி ஒரு மறைமுக வரி. இது இந்தியா முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த வரியானது ஜிஎஸ்டி சபை மற்றும் அதன் தலைவர் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில், அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு மாதத்தில் சரக்கு – சேவை வரி ரூ.1.5 லட்சம் கோடியாக வசூலாகியிருப்பது இது 2வது முறையாகும்.

இதற்கு முன் 2022 ஏப்ரலில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்டோபரில் ஒன்றிய சரக்கு சேவை வரி வசூல் ரூ.26.039 கோடியாகவும், மாநில சரக்கு சேவை வரி ரூ.33,396 கோடியாகவும் இருந்தது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வகையில் அக்டோபரில் ரூ.81,778 கோடி வசூலாகி உள்ளதாகவும் ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யில் இறக்குமதி வரியாக ரூ.37,297 கோடி வசூலாகி உள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்திலி ஜிஎஸ்டி வசூல் 25 சதவீதம் அதிகரித்து ரூ.9,540 கோடி என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.