கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் வரும் 31-ம் தேதி கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடையடைப்பு அன்று அனைத்து வணிகர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். கடைகளை அடைக்கக் கோரி வற்புறுத்தப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அன்றைய தினம் அனைத்துப் பொருட்களும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என மாநகர காவல்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், அனைத்து ஜமாத், அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் உடன் பேச்சு நடத்தினர். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர் கூறியதாவது:
பா.ஜ.க. அறிவித்த பந்த் என்பது கோவை மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பந்த் சமயத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என காவல்துறையிடம் கேட்டுள்ளோம். வருங்காலத்தில் காவல் துறைக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவோம். மத கண்ணோட்டத்தில் இந்தச் சம்பவத்தைப் பார்க்க வேண்டாம். எல்லாம் மதத்திலும், மதத்தை நம்பாதவர்களும் தவறு செய்கிறார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் தவறு செய்யும்போது அதை பல கோணத்தில் தொடர்பு படுத்தி பேசுகிறார்கள். இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நாங்கள் உண்மை கண்டறியும் சோதனை குழு ஒன்றை அமைத்தோம். அந்தக் குழு விசாரித்ததில் கைது செய்யப்பட்ட குற்றவாளியில் ஒருவர் கார் வியாபரம் செய்பவர். அவர் வெறும் கார் வியாபரம் செய்பவர் மட்டுமே, அவர் குடும்பம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிற சூழலில் உள்ளது. இப்படி இருக்க அவர்மீது எந்த தவறுமில்லை என மாநகர காவல் ஆணையரிடம் தெரிவித்துள்ளோம். தேவையில்லாமல் கோவையில் மத பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதே எங்கள் விருப்பம் என தெரிவித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0