பென்சீன் வேதிப்பொருள் கலந்ததின் காரணமாக தனது தயாரிப்புகளான டவ் ட்ரை ஷாம்பூ உள்ளிட்ட பல்வேறு ஷாம்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது யுனிலீவர் நிறுவனம்.
2021 அக்டோபர் மாதத்திற்கு முந்தைய தனது தயாரிப்புகளில் புற்றுநோயை விளைவிக்கும் பென்சீன் கலந்துவிட்டதாகக் கூறி அவற்றை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நெக்சஸ், சாவே, ட்ரெஸ்ஸமே, டிகி மற்றும் ஏரோஸார் ட்ரை ஷாம்பூ ஆகியனவற்றை அமெரிக்க சந்தைகளில் இருந்து திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக கூறுகின்றனர் நீண்ட காலமாகவே அழகு சாதனப் பொருட்களின் ஆபத்துகளைப் பற்றி எச்சரிக்கும் நிபுணர்கள். பெர்சனல் கேர் பொருட்களில் ஏரோஸால்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் எழும்புகிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன், நியூட்ரோஜீனா, எட்ஜ்வெல் பெர்சனல் கேர் நிறுவனத்தின் பனானா போட், ஓல்ட் ஸ்பைஸ் மற்றும் யுனிலீவரின் சாவே ஆகிய பொருட்கள் பலவும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இதுபோன்று ட்ரை ஷாம்பூக்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கண்டறியப்படுவது இது முதன் முறையல்ல. ப்ராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தி பேன்டீன் மற்றும் ஹெர்பல் எசன்ஸ் ட்ரை ஷாம்பூக்களையும் திரும்பப் பெற்றது. இது கடந்த டிசம்பரில் நடந்தது. அப்போதும் பென்சீன் கலப்படம் பற்றியே கூறப்பட்டது.
ஏரோஸால்களில் இருக்கும் பெரும் பிரச்சினையே அவற்றை ஸ்ப்ரே செய்ய பயன்படுத்தப்படும் ப்ரொப்பலன்ட்களில் பென்சீன் இருப்பதே என்று பெர்சனல் கேர் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன. யுனிலீவரும் இதே காரணத்துக்காகத் தான் ட்ரை ஷாம்பூக்களை திரும்பப் பெற்றதாகக் கூறுகிறது. பென்சீன் நம் உடலில் கலந்தால் நமக்கு ரத்தப் புற்றுநோய் அல்லது ரத்தம் சம்பந்தப்பட்ட பிற புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.